அத்தியாயம் - 60
முன்மாலைப் பொழுதில் வீட்டிற்கு வந்து சேர்ந்த பிரபுவிற்கு, விச்ராந்தியாக அமரவேண்டும் போலிருந்தது.
ஆனால், ‘இரண்டு நாள்களில் சேர்ந்திருந்த வேலைகளை முடிக்கவேண்டுமே’ என்ற எண்ணத்துடன், தான் வந்து சேர்ந்துவிட்டதைத் தெரிவிக்க, சஹானாவிற்குப் போன் செய்தான்.
“ஹலோ! சொல்லுங்க…” என்றாள்.
“நான் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன் சஹி!”
“ம், பத்திரமா போனீங்களா?” என்றாள்.
மனத்திற்குள் சிரித்துக்கொண்டவன், “பத்திரமா இருக்கறதால தானே போன் பண்றேன்” என்றான்.
‘சரியான குசும்பு பிடிச்ச மனுஷன்!’ என்று அவள் முணுமுணுத்தது, இங்கே அவனுக்குத் தெளிவாக கேட்டது.
சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன், “ஏதாவது சொன்னியா…?” என்றான்.
“ம், ரெண்டு நாளா விட்டுட்டு வந்த வேலையெல்லாம் இருக்கும். போய் அதைப் பாருங்கன்னு சொன்னேன்…” என்றாள் எரிச்சலுடன்.
“ஆமா… ஆஃபிஸ் வேலையிருக்கு. அப்புறம்…” என்றவன் பாதியிலேயே நிறுத்தினான்.
மறுமுனையில் சிலநொடிகள் எந்தப் பதிலும் இல்லாமல் போக, “சஹானா!” என்றழைத்தான்.
“இருக்கேன். யார் யாரைப் பார்க்கணுமோ போய்ப் பாருங்க…” என்றாள் அதே குரலில்.
“அட, வேலையைப் பார்க்கணும், அப்புறம் உடம்பெல்லாம் வலிக்குது… ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்ல வந்தேன்…” என்றான்.
மீண்டும் அவள் மௌனத்தில் ஆழ்ந்துவிட, “வைக்கட்டுமா… ஆஃபிஸ் கிளம்பணும். நைட் வந்து பேசறேன்…” என்றான் மென்மையாக.
மௌனமே அவனுக்குப் பதிலாக, “என்ன பதிலையே காணோம்…” என்றான்.
“மௌனம் சம்மதம்னு அர்த்தம்…” என்றாள் குழைந்த குரலில்.
புன்னகைத்தவன், “பை” என்றதற்கு, “பை” என்றாள் சிரிப்புடன்.
முன்தினம் இரவில் நடந்த நிகழ்விலேயே தன்னை முழுதாக புரிந்து கொண்டான் என்று அவளுக்குத் தெரிந்துவிட்டது.
‘தன் மனத்திலிருப்பதையும், பிரிதலுக்கான காரணத்தையும் அவன் யூகித்திருப்பான். இன்றுவரை தனது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன் அவன். மனத்திற்குள் சிறு தாங்கல் இருந்தாலும், நிச்சயம் புரிந்து கொள்வான்’ என்று நினைத்தாள்.
அதற்கேற்றார் போல அவன் அவளிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. அவள்தான் மனம் மாறிவிட்டாளே என்று தனக்கான உரிமையை முழுதாக அங்கே வெளிப்படுத்தவும் இல்லை.
சஹானாவைப் பொறுத்தவரை, நடந்தது நடந்துவிட்டது. இனி, அவள் வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்கிறாளோ… அல்லது இப்படியே ஒற்றையாக இருக்கிறாளோ அது அவளது விருப்பம்.
அதற்காக ஒரு பெண்ணின் சாபத்தில் தனது வாழ்க்கையை அவள் நடத்த தயாராக இல்லை. அவளாக தங்களது வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக விலகிச் செல்ல வேண்டும். ஒரு உணர்விலிருந்து வெளிவர வேண்டுமெனில் அது உணர்ந்தால் மட்டுமே முடியும்.
தவறு என்று தெரிந்தபோதும், அவள் பிரபுவின் மீது கொண்டிருக்கும் மோகத்தை அவளாகவே கலைத்தாக வேண்டும். பிரபுவிற்கும், தனக்கும் இடையிலிருக்கும் ஆழமான புரிதலை அவள் உணர்ந்தால் மட்டுமே, அவளாக தங்களது வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வாள்.
தான் அருகில் இல்லாவிடினும் பிரபுவின் காதல் தன்னிடம் மட்டுமே என்று ஜோஷிதாவிற்கு புரியவைக்க வேண்டும்.
தங்களது வாழ்க்கையை செம்மைபடுத்திக் கொள்ள, இதுமட்டுமே தீர்வு என்ற முடிவுடன், ஜோஷிதாவைச் சந்திக்கச் சென்றாள். கணவனின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், ஆழமான காதலுமே அவளிடம் சவால்விட வைத்தது.
இவற்றையெல்லாம் பிரபுவிடம் நேரடியாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், நிச்சயம் அவள் பிரிந்து செல்ல அவன் சம்மதித்திருக்க மாட்டான்.
அவளது மனத்தை முழுமையாக அறிந்து கொண்டபின், ஒரு மனைவியாக அவளது எண்ணமும் நியாயமானது என்று அவளிடமிருந்து விலகி நின்றான்.
அத்துடன், தனக்குத் தெரியக்கூடாது என்ற எண்ணத்துடன் அவளிருக்க, தானும் அதையே பின்பற்றி விடலாம் என்று மௌனமாக இருந்தான்.
ஒருவர் மனத்திலிருப்பது அடுத்தவருக்குத் தெரிய வேண்டாம் என்று இருவருமே நினைத்தபோதும், அவர்களுக்கிடையிலிருந்த அன்பே அதை அவர்களுக்கு உணர்த்திவிட்டது.
***********
பூரிப்பில் மலர்ந்த முகத்துடன் அலுவலகத்திற்குள் நுழைந்த தங்களது எம்.டியை அனைவருமே ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
புன்சிரிப்புடன், அவர்களுக்கு பதில் வணக்கம் சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் பிரபு.
நீண்ட நாள்களுக்குப் பிறகு அவனது முகத்தில் உறைந்திருந்த புன்னகையை, கண்கள் குளிர பார்த்தான் சுரேஷ்.
“குட் ஆஃப்டர்நூன் சார்!” என்றவனுக்குச் சிரிப்புடன் பதில் வணக்கம் சொன்னான் பிரபு.
இரண்டு நாள்களாக அவ்வப்போது போனில் தகவல்கள் கேட்டுக் கொண்டாலும், மீண்டும் ஒருமுறை அவற்றை கேட்டுக்கொண்டான்.
“ம்ம், வேற ஏதாவது முக்கியமான போன் கால்ஸ்… லெட்டர்ஸ்…”
மெல்லத் தலையை அசைத்தவன், “இல்ல சார்!” என்றான்.
“நைஸ்…” என்றவன், லேப்டாப்பை ஆன் செய்தான்.
சுரேஷ் இன்னமும் அங்கேயே அமர்ந்திருக்க, புருவங்களை உயர்த்தி, “எனிதிங்… ஸ்பெஷல்?” என்றான்.
அசட்டுச் சிரிப்புடன், “நத்திங் சார்! ஆனா…” என்று இழுத்தான்.
பேனாவின் இருமுனைகளையும் விரல்களுக்கிடையில் உருட்டியபடி, புன்னகையும், ஆர்வத்துடனும் பார்த்தான்.
“உங்களை இப்படிப் பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்கு சார்!” தயக்கமும், அசட்டுச் சிரிப்புமாகச் சொன்னான்.
“ஹேய்! கண்ணு வைக்காதேப்பா!” என்று உல்லாசமாகச் சிரித்தான்.
“இருந்தாலும், காம்ப்ளிமெண்டுக்குத் தேங்க்ஸ்…” என்றவன், அதே மனநிலையுடன் தனது வேலையில் மூழ்கிப் போனான்.
பயண களைப்பில் உடல் சற்று ஓய்வைக் கேட்க, ஆறரை மணிவாக்கில் வீட்டிற்குக் கிளம்பும் நேரம் அலுவலக போன் ஒலித்தது.
கதவருகில் சென்றவன் திரும்பி வந்து போனை எடுத்தான்.
“நான் ஜோஷிதா பேசறேன்” என்றது மறுபக்கத்துக் குரல்.
நெற்றியை நீவிக் கொண்டவன், “சொல்லு… எப்படியிருக்க..? நான் நாளைக்கு ஹாஸ்பிட்டல் வரேன்…” என்றான்.
“அதுக்கான தேவை இருக்காது பிரபு!” என்றாள்.
அவன் புரியாமல் யோசிக்க, “நான் மதியானமே வீட்டுக்கு வந்துட்டேன்” என்றாள்.
“ஏன்? வீட்டுக்கு வந்தா நீ தனியா இருக்கணும்னு தானே அங்கேயே இருக்கச் சொன்னேன்.”
“அங்கேயும் நான் தனியாதானே இருந்தேன்…” என்றவளுக்குக் குரல் தழுதழுத்தது.
பிரபுவிற்கு தர்மசங்கடமாக இருக்க, சுதாரித்துக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“நான் போனை வைக்கிறேன் பிரபு!” என்றாள்.
அழுகையால் குரல் உள்ளேயும், வெளியேயும் சென்று வந்தது.
“ம்ம்…” என்றவன் போனை வைத்தான்.
***********
அழைப்பு மணி ஓசை கேட்டு கதவைத் திறந்த ஜோஷிதா, பிரபுவைக் கண்டதும் கண்கள் மின்ன முறுவலித்தாள்.
“வாங்க…” என்றாள்.
“ம், எப்படியிருக்க?” உள்ளே வந்து கொண்டே கேட்டான்.
“ம்… இருக்கேன்…” என்றாள் விட்டேத்தியாக.
பெருமூச்சொன்றை வெளியிட்டவன், “காயம் ஆறிடுச்சா? வலி எதுவும் இல்லையே…” கேட்டுக் கொண்டே அவளது கரத்தைப் பார்த்தான்.
கட்டு இல்லாமல் ப்ளாஸ்டர் மட்டும் போடப்பட்டிருந்தது.
“இல்ல…” என்றாள்.
அடுத்து இருவருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, பிரபுவிற்கு அங்கே அமர்ந்திருப்பதே அவஸ்தையாக இருந்தது.
“உன் போனுக்கு என்ன ஆச்சு? பி.சி.ஓலயிருந்து பேசின போல.”
‘உன் மனைவி பேசிய பேச்சைக் கேட்டு ஆத்திரத்தில் வீசியெறிந்து உடைத்து விட்டேன்’ மனத்திற்குள் நினைத்ததை வெளியில் சொல்லாமல், “கீழே விழுந்து உடைஞ்சி போச்சு” என்றாள்.
“ஓ!” எனக் கேட்டுக் கொண்டான்.
மெதுவாக, “ரெண்டு நாளைக்கு முன்னால, உங்க வைஃப் என்னைப் பார்க்க ஹாஸ்பிட்டல் வந்திருந்தாங்க…” என்றாள்.
“ஓஹ்! என்ன சொன்னா?”
“உங்களை இனி பார்க்கக்கூடாது, பேசக்கூடாதுன்னு சொன்னாங்க…”
“அப்படியா சொன்னா?” சற்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
“அதுமட்டும் இல்ல… என் வீட்டுக்காரர் முட்டாள்தனமா உனக்கு அதைச் செய்யணும், இதைச் செய்யணும்னு சொல்லிட்டு இருக்கார். உனக்காவது புத்தி வேணாமான்னு கேட்டாங்க” என்றாள்.
அவன் அமைதியாக அவளைப் பார்த்தான்.
“ஏன் பிரபு! நானா உங்களை எனக்கு வீடு வேணும், பணம் வேணும்னு கேட்டேன்? நீங்களா செய்யறதுக்கு நான் என்ன செய்வேன். எனக்குன்னு யாரும் இல்லாததால என் வாழ்க்கையே திசைமாறிப் போச்சு.
எனக்குன்னு பெத்தவங்களோ… கூடப் பிறந்தவங்களோ இருந்திருந்தா, இந்தமாதிரி எல்லார்கிட்டயும் பேச்சு வாங்க வேண்டியிருந்திருக்குமா? அன்னைக்கு நீங்களே பார்த்தீங்க இல்ல. அந்த மதன்… குடிச்சிட்டு என்னவெல்லாம் பேசினான்.
அத்தனைப் பேர் இருக்கும் ஒரு இடத்திலேயே அவன் அப்படிக் கேட்டான்னா, நான் தனியா இருந்தா இன்னும் எத்தனைப் பேர் இப்படிப் பேசுவாங்களோ… இதையெல்லாம் யார் கேட்பாங்க? ஒரு பொண்ணுக்குத் துணைதான் அவசியம். பணமோ, சொத்தோ இல்ல…
ஆம்பளைங்க எது செய்தாலும் பெரிசா எடுத்துக்காத இந்தச் சமூகத்துல, ஒரு பொண்ணு எதைச் செய்தாலும் செய்தியாதான் பார்க்கறாங்க. ஆண் செய்தா சாதாரண விஷயமா எடுத்துக்கறவங்களுக்கு, ஒரு பொண்ணுக்கு ஏற்படுற அவமானம்கூட காசு பார்க்கும் விளம்பரமா ஆகிடுது.
என் நிலையை நான் யார்கிட்ட சொல்றது? இல்ல சொல்லமுடியும்? எல்லோருக்கும் அவங்கவங்க வாழ்க்கைத்தான் முக்கியமாயிருக்கு.
அன்னைக்கு சஹானாவும் தானே ஆரம்பத்திலயிருந்து எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தாங்க…” என்றவள் வராத கண்ணீரை மறைக்க முகத்தை மூடிக்கொண்டாள்.
அவளையும் அறியாமல் கடைசியாக சொன்ன வாக்கியத்தைக் கேட்ட பிரபு, நிமிர்ந்து அமர்ந்தான். அவளை ஆழமாக ஊடுறுவிப் பார்த்தான்.
மூக்கை உறிந்தபடி நிமிர்ந்து அமர்ந்தவள், “சாரி இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டிருக்கேன். ஆனா, என் மனசுல இருக்கறதையும் நான் யார்கிட்ட சொல்ல முடியும்.
உங்களுக்கு என்மேல இருக்கும் அக்கறையும், உரிமையும் தெரியும். யார் நினைச்சாலும், அதை இல்லன்னு சொல்லமுடியாது இல்ல... அதான், புலம்பிட்டு இருக்கேன்…” முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவன் அமைதியாக இருப்பதைத் தனக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
“பாருங்க உங்களுக்குக் குடிக்கக்கூட எதுவும் கொடுக்காம பேசிட்டு இருக்கேன்…” என்று எழுந்தாள்.
“எதுவும் வேணாம் நீ உட்கார்…” அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி ஒலிக்கும் ஓசை கேட்டது.
அவன் செல்வான் என்று நினைக்க, பிரபுவோ அசையாமல் அமர்ந்திருந்தான்.
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்து சென்றாள்.
ஹோட்டலில் இருந்து வந்திருப்பதாகக் கூறி ஒரு பார்சலை அவளிடம் கொடுத்தான்.
“நான் எதுவும்…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நான்தான் டின்னர் ஆர்டர் பண்ணியிருந்தேன்…” சொல்லிக்கொண்டே எழுந்து வந்தான்.
பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தவன், “நான் கிளம்பறேன். டேக் கேர்…” என்றான்.
அவன் இத்தனைச் சீக்கிரம் கிளம்பிவிடுவான் என்று நினைக்காதவள், திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் இருங்களேன் பிரபு! நாம் ரெண்டு பேரு சேர்ந்து டின்னர் சாப்பிடுவோம்… ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.
“சாரி ஜோஷிதா! நீ சாப்பிடு… நேரமாகுது பை” என்றவன், அவளது பதிலுக்காகக் காத்திருக்காமல் கிளம்பினான்.
அவன் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்த ஜோஷிதாவின் முகத்தில் இதுவரை குடிகொண்டிருந்த போலியானப் புன்னகை முற்றிலுமாக விடைபெற்றிருந்தது.
‘உன்னை என் வீடு வரை தேடி வரவச்சிட்டேன் பிரபு! கொஞ்சம் கொஞ்சமா உன்னை எப்படி என் வலையில் விழ வைக்கறேன்னு பாரு…’ மனத்திற்குள் நினைத்துக் கொண்டே கண்ணாடியின் முன்பாக வந்து நின்றாள்.
சஹானா தன்னிடம் பேசிவிட்டுச் சென்ற அந்த நிமிடம் மீண்டும் கண்முன்னே வந்து நின்றது.
மெல்ல புன்னகைத்தவள், “சஹானா! எனக்கு ஒரு மாசம் டைம் கொடுத்த… இதுதான் நாம கடைசியா சந்திக்கறதுன்னு வேற சொன்ன… முழுசா விலகிப் போயிடுன்னு சொன்ன… நீ சொன்ன அத்தனையும் நடக்கும். ஆனா, விலகிப் போகப் போறது நான் இல்ல. நீ...
நீ கொடுத்த ஒரு மாசம் எனக்குப் போதும் சஹானா! அதுவரைக்கும் நீ மிசஸ். பிரபுவா உன் வாழ்க்கையை சந்தோஷமா கழிச்சிக்கோ…
அதுக்கப்புறம்… உன்னோட பிரபு என் பிரபுவா மாறியிருப்பார். அன்னைக்கு உன் முகம் எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கேன் சஹானா!”
தான் கட்டுவது மணற்கோட்டை என்பதை அறியாமல், மேலும் மேலும் கனவு கண்டுகொண்டிருந்தாள்.
No comments:
Post a Comment