Sunday, December 20, 2015

உறவெனும் புதிய வானில்

அத்தியாயம் - 61

அவள் தென்காசிக்கு வந்து பத்துநாள்கள் வேகமாக உருண்டோடி விட்டது.

வீட்டின் பின்புறமிருந்த துணிதுவைக்கும் கல்லின் மீது, ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்தாள் சஹானா.

வானத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்த பால்நிலவை, வெறித்துக் கொண்டிருந்தாள். ‘நம்பிக்கை என்ற துணைக்கரம் இருந்தாலும், புதிதாக ஏதேனும் பிரச்சனை உருவாகக் கூடாதே…’ என்ற சிறு சஞ்சலம் மனத்தை நெருடிக்கொண்டே இருந்தது.

இந்த மனம்தான் எத்தனை விசித்திரமானது! நல்லபடியாக நடக்கும் என்ற முடிவுடன் கிளம்பி வந்துவிட்ட போதும், அவ்வப்போது சிறு குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

பெருமூச்சுடன் தன்னிலைக்கு வந்தவள், கிணற்றின் மீது அமர்ந்திருந்த ஸ்ரீராமை பார்த்ததும் திடுக்கிட்டாள்.

“நீங்க எப்போண்ணா வந்தீங்க?” குரலில் இலகுத் தன்மையை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.

“நிலாவை யோசனையோட பார்த்துட்டு இருந்தியே… அப்பவே வந்துட்டேன்.”

தமையனின் ஆராய்ச்சியான பார்வை, அவளைச் சங்கடப்படுத்தியது.

வந்த நாள் முதலாக, அவளும் அவ்வப்போது கவனித்தாளே. நன்றாகச் சிரித்துப் பேசினாலும், அவனது பார்வை அவ்வப்போது தன்னைத் துளைப்பதை பார்த்திருக்கிறாளே.

அவன் ஏதேனும் கேள்வி கேட்டுத் தன்னைத் துளைப்பதற்குள், அங்கிருந்து சென்றுவிடும் எண்ணத்துடன் எழுந்தாள்.

“நேரமாகுதுண்ணா! நான் கிளம்பறேன்…” என்றாள்.

“நான் வந்ததே உன்கிட்ட பேசத்தான். உட்காரு…” என்றான்.

அவனது குரலிலிருந்த அழுத்தம், அவளை அமரவைத்தது.

“லைஃப் எப்படிப் போகுது சஹி?”

“எனக்கென்ன ரொம்பவே நல்லாப் போகுதே” என்றாள்.

இயல்பாக பேசுவதைப் போலிருந்தாலும், தங்கையின் தடுமாற்றத்தை அவன் உணர்ந்தே இருந்தான்.

“ம், அப்புறம் என்னைக்கு ஊருக்குக் கிளம்பற?”

நிமிர்ந்து அண்ணனை வித்தியாசமாகப் பார்த்தாள்.

“ஏன்ணா! திடீர்னு கேக்கறீங்க? ஒரு மாசம் இருப்பேன்னு சொன்னேனே…”
“ஒருமாசம் தானா! இல்ல…” என்றவன் முடிக்காமல் தங்கையைப் பார்த்தான்.

சஹானாவிற்கு உள்ளுக்குள் கலக்கமாக இருந்தாலும், “நீங்க எதையோ மனசுல வச்சிட்டு கேட்கறா மாதிரியிருக்கு…” என்றாள்.

“ஓபனா கேட்டுடட்டுமா?” என்ற தமையனை, இமைகள் விரிய பார்த்தாள்.

“என்னம்மா பதிலே சொல்லமாட்டேன்ற?” என்றவன் தீவிர முகபாவத்துடன் தங்கையைப் பார்த்தான்.

“கே..கேளுங்க…”

“நானும் வந்த நாளா பார்க்கறேன்… நல்லா பேசிட்டிருப்ப, திடீர்னு அமைதியாகிடுற. வீட்ல யாருக்கும் உன்னோட மாற்றம் தெரியலைனாலும், எனக்கு நல்லாவே தெரியும். அதுக்கான காரணமும் தெரியும்” என்றான் கூர்மையாக.

திகைப்புடன் தமையனைப் பார்த்தாள்.

“இது இன்னைக்கு வந்த சந்தேகம் இல்ல சஹானா! வர்ஷாவோட வளைகாப்புக்குப் புடவை எடுக்க சென்னை வந்தேன் பாரு… அன்னைலயிருந்தே கொஞ்சம் சந்தேகம் இருந்தது” என்றான்.

“அப்படில்லாம் எதுவும் இல்ல… நீங்களா ஏதோ கற்பனை பண்ணிட்டு இருக்கீங்க” எனறு குறுநகை புரிந்தாள்.

“அப்படியா சொல்ற…? அப்போ, அந்த ஜோஷிதாவால உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைதானே” என்றான்.

அண்ணனின் பேச்சைக் கேட்டதும் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

‘அவளது பெயர் எப்படித் தெரியும்?’ சஹானா குழப்பமும், அச்சமுமாக அண்ணனைப் பார்த்தாள்.

“அவளோட பேர் எனக்கெப்படித் தெரியும்னு பார்க்கறியா? பேர் மட்டுமில்ல… பிரபுவுக்கும்…”

பேசிக்கொண்டே சென்ற ஸ்ரீராமை, “அண்ணா!” என்ற சஹானாவின் குரல் இடைமறித்தது.

யாருக்குமே தெரியக்கூடாது என்று பொத்தி வைத்த இரகசியம். அதிலும், தனது அண்ணனுக்குத் தெரிந்துவிட்டதில் அவளது மனம் தவியாய் தவித்தது.

“நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. அவளுக்குத்தான் அவர்மேல ஒரு அபிப்பிராயம் இருந்தது. அவருக்கில்ல…” என்று படபடத்தாள்.

முந்தானையின் முனையை விரலில் சுற்றுவதும், அவிழ்ப்பதுமாக இருந்தாள்.

அண்ணனாக இருந்தாலும், அவனிடம் தனது கணவனை விட்டுக்கொடுத்துப் பேச அவள் தயாராக இல்லை. அதேபோல், தங்கைக்காக தானே தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை என்று எப்போதும் கர்வத்துடன் இருக்கும் அண்ணனின் மனத்தை நோகடிக்கவும் விருப்பமில்லை.

“எனக்கு எல்லாமே தெரியும்மா!” குரல் கம்ம அவன் சொல்ல, விழிகளில் திரண்ட கண்ணீரை மறைக்கமுடியாமல் தடுமாறினாள்.

தங்கையின் தலையைப் பரிவுடன் தடவிக்கொடுத்தான்.

இத்தனை நாள்களாக எல்லாம் புரிந்து, அறிந்து முடிவெடுத்தவளுக்கு ஆதரவாக ஒரு கரம் நீளவும், தனது மனத்தை மறைக்காமல் அண்ணனின் தோளில் சாய்ந்து அழுதாள்.

“எல்லாமே முடிஞ்சி போன விஷயம்ண்ணா! நீங்க, அவரைத் தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்!” என்ற தங்கையை வாத்சல்யத்துடன் பார்த்தான்.

“ஏம்மா! மஞ்சள் கயிறு ஒண்ணு கழுத்துல ஏறினதும், நீங்கள்லாம் ஏமாளிங்களா மாறிடுவீங்களா என்ன?”

கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள், “குடும்பத்தைக் கட்டிக் காக்கறதும், உறவுகளை அரவணைச்சி போறதும் ஏமாளித்தனம்னா, அப்படியிருக்கறது எனக்குப் பிடிச்சிருக்குண்ணா!” என்ற தங்கையைப் பெருமிதத்துடன் பார்த்தான்.

“அப்புறம் ஏம்மா பிரபுவைத் தனியா விட்டுட்டு வந்த?” தமையனின் குரலில் ஆதங்கம் எட்டிப்பார்த்தது.

ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் தெரிந்திருந்த தமையனிடம், சூரஜ் வீட்டின் விழாவில் நடந்த அனைத்தையும் கூறியவள், அதன் காரணமாக தான் எடுத்த முடிவையும் சொன்னாள்.

“நீ அவசரப்பட்டுட்டியோன்னு தோணுது சஹி!”

“இல்லண்ணா! சரியான முடிவெடுத்திருக்கேன். காதலுக்குத் தேவை வெறும் உடற்கவர்ச்சி இல்ல… புரிதலும், நம்பிக்கையும் தான் அதுக்கு ஆதாரம்னு ஜோஷிதாவுக்குப் புரியணும்.

இனி, அவள் எங்க வாழ்க்கைல வரக்கூடாது. அப்போதான் என்னால நிம்மதியா இருக்கமுடியும். இதுல பிரபு மேலயும் தப்பு இருக்கு. அவளோட மனசு வருத்தப்பட்டா நாங்க நிம்மதியா இருக்கமுடியாதுண்ணா!

ஒரு பொண்ணா, அவள்மேல எனக்குப் பரிதாபம் இருந்தாலும், பிரபுவோட மனைவியா, என்னால இதை வரவேற்க முடியாதுண்ணா! அந்த விஷயத்தில் நான் ஒரு சுயநலவாதிதான்.

பிரபுவை தனியா விட்டுட்டு வந்திருந்தாலும், நாங்க மனசால ஒண்ணாதான் இருக்கோம்” என்று மனத்திலிருந்ததை பகிர்ந்து கொண்டவள், ‘என்னோட அருகாமையும் அரவணைப்பும் அவருக்கு எப்போ தேவைப்படுதோ, அப்ப நான் அவரோட இருப்பேன்’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.

“என் தங்கச்சியை இப்படிப் பொறுப்பான குடும்பத் தலைவியா பார்க்க எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” என்றான் புன்னகையுடன்.

முறுவலித்தவள், “நீங்க எப்படிண்ணா தெரிஞ்சிகிட்டீங்க?” அறிந்துகொள்ளும் ஆவலுடன் கேட்டாள்.

சிரித்தவன், “கண்டிப்பா தெரியணுமா?” என்றதும் ஆமென்பது போலத் தலையை அசைத்தாள்.

“பிரபுதான் சொன்னான்.”

‘பிரபுவா…?’ அதிர்ந்து போய்ப் பார்த்தவள், “எப்போ?” என்றாள்.

“நீ வர்ஷாகூட ஹாஸ்பில்ல இருந்தயில்ல… அன்னைக்கு” என்றான்.

‘அன்றேவா!’ என்று ஆச்சரியமாக இருந்தாலும், ‘ஏன்?’ என்ற கேள்வி எழுந்தது.

அதேநேரம் ஸ்ரீராமிடம், “நீங்க அவரை எதுவும்… சொல்லிடலையே…” தவிப்புடன் கேட்டாள்.

“ம், அவன் சட்டையைப் பிடிச்சி உலுக்கணும்னு கோபம் வந்தது. ஆனா, இது எனக்குத் தெரியவேண்டிய அவசியமே இல்ல. இருந்தாலும், என்மேல நீங்க வச்சிருக்க மதிப்பையும், மரியாதையையும் பார்க்கும் போது…
உங்களையெல்லாம் ஏமாத்துறேன்னு கஷ்டமா இருக்குன்னு சொல்லித் தப்பை ஒத்துக்கறவனை என்ன செய்ய முடியும்?” என்றவன் தங்கையின் முகத்தைப் பார்த்தான்.

இமைக்காமல், அவன் சொல்லப்போவதைக் கேட்க பரபரப்புடன் காத்திருந்தாள்.

“வேற எண்ண பண்றது? வழக்கம் போல பிரியமா ஒரு அணைப்பை பரிசா கொடுத்தாச்சு…” என்றதும், அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டவளுக்கு முகம் விகசித்தது.

“அவரைப் புரிஞ்சிகிட்டதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்ண்ணா!” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

“ஹேய்! நீ சந்தோஷமா இருக்கணும்டா! அதுதான் எங்களுக்கெல்லாம் வேணும். சீக்கிரம் நீ உன் வீட்டுக்குப் போகணும். அதுக்கான வேலையைப் பார்க்கச் சொல்லு அவனை” என்றதும், “ம்ம்..” என்றாள் சந்தோஷத்துடன்.

No comments:

Post a Comment