அத்தியாயம் - 62
பிரபு, ஜோஷிதாவின் வீட்டிற்கு வந்துவிட்டுச் சென்ற மறுநாள், அவளே அவனுக்குப் பி.சி.ஓ விலிருந்து போன் செய்தாள். அவள் எதிர்பார்த்ததைப் போலவே, உடனே அவன் போனை எடுத்தான்.
“சொல்லு ஜோஷிதா!” என்ற அவனது ஆறுதலான குரல் அவளுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுக்க, மெல்ல பேச ஆரம்பித்தாள்.
“ஹாஸ்பிட்டல்ல நீங்க டெபாஸிட் கொடுத்துட்டுப் போயிருந்தீங்க இல்ல. அதுல பேலஸ் அமௌண்ட் என்கிட்ட இருக்கு. நேத்து நீங்க வந்தப்பவே கொடுக்கணும்னு நினைச்சேன்…”
“பரவாயில்ல… உன்கிட்டயே இருக்கட்டும்…”
“இல்ல…”
“ஒண்ணும் பிரச்சனையில்ல ஜோ!”
‘எத்தனை நாள்களுக்குப் பிறகு தன்னை இப்படி அழைத்திருக்கிறான்…’
சந்தோஷத்தில் அவளுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.
“ம், சரி” என்றாள் மகிழ்ச்சியுடன்.
“மெடிசன்ஸ் கரெக்டா சாப்பிடுறியா?”
“ம்ம்…” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை.
சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தாள்.
“ஓகே… வைக்கிறேன்” என்றான்.
“ஒருநிமிஷம்…” என்றாள்.
“சொல்லு….” என்றான்.
“ஈவ்னிங் வரீங்களா…” கெஞ்சலாகக் கேட்டாள்.
சற்றுநேரம் மௌனம் சாதித்தவன், “ம்…” என்று போனை வைத்தான்.
சொன்னதைப் போலவே வந்தவன், அவளுக்குப் புதிதாக ஒரு மொபைல் போனையும் வாங்கி வந்து கொடுத்தான். அவளுக்குப் பெரும் சந்தோஷம்.
‘மறுநாள் போன் செய்யலாமா வேண்டாமா?’ என்ற வெகுநேர குழப்பத்திற்குப் பிறகு, ‘செய்தே ஆகவேண்டும்’ என்ற முடிவுடன் போன் செய்தாள்.
“என்ன விஷயம் காலையிலேயே போன்?” என்றவனுக்கு, புதுப்போனில் முதலில் அவனை அழைப்பதாகச் சொன்னாள்.
சிரித்துக்கொண்டவன் இயல்பாகவே பேசினான்.
மூன்றாவதுநாள், அவளே எதிர்பாராத வண்ணம் திடீரென காலை நேரத்தில் அவளது வீட்டிற்கு வந்தான். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அவளது வீட்டிலேயே இருந்தான்.
அடுத்தநாள் அவனை அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, அவன் வரவேயில்லை. போனையும் எடுக்கவில்லை என்றது கோபமும், குழப்பமும் ஏற்பட அவனது அலுவலகத்திற்கே அழைத்தாள்.
போனை எடுத்த சுரேஷ், “சார் பிசினஸ் விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறார். வர நான்கு நாள்களாகும் என்று போனை வைத்துவிட்டான்.
அவன் அப்படி வெளியூர் செல்லும் நாள்களில் அவனாக போன் செய்தாலேயன்றி அவள் அழைத்தாள் பேசமாட்டான். அது தெரிந்த விஷயமாதலால் அவளும் அவனை அழைக்கவில்லை.
மூன்றுநாள்கள் முடிந்த நிலையில், ஒருநாள் மதியநேரத்தில் அவள் வெளியே சென்றிருக்க, பிரபுவின் கார் ஒரு ரெஸ்டரண்டிற்குள் நுழைவதைப் பார்த்தாள்.
அவன் தன்னை ஏமாற்றுகிறான் என்று புரிய, கோபத்துடன் வேகமாக ரெஸ்டாரெண்டிற்குள் சென்றாள்.
யாருக்கோ காத்திருப்பதைப் போல, கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு மெனுகார்டில் பார்வையைப் பதித்தான்.
அவனருகில் சென்று நின்றவள், “பிரபு! ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க? அப்போ என்கிட்ட பழகறதெல்லாம் வெறும் கண்துடைப்பா…” என்று சீறினாள்.
குரலில் ஏமாற்றத்தின் சாயல் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவளைச் சமாதானப்படுத்தியவன், “என்னை நம்பமாட்டியா நீ? மதியானம் தான் வந்தேன். அவசரமா ஒருத்தரைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்தான் சுரேஷ்.
அவனைக் கண்டதும் அவள் சற்று அமைதிகாக்க, “சார்! அந்தக் கிளையண்ட் வர கொஞ்சம் லேட் ஆகுமாம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா… நாளைக்கு மீட் பண்ணலாமான்னு அவங்க பி.ஏ கேட்கறார்” என்றான்.
முகவாயைத் தடவியவன், “ஓகே” என்று தோள்களைக் குலுக்கினான்.
போனில் பேசியபடியே சுரேஷ் அங்கிருந்து செல்ல, அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான் பிரபு.
“சாரிப்பா! நீங்க என்னை அவாய்ட் பண்றீங்கன்னு நினைச்சி…” என்று மழுப்பலாகச் சிரித்தாள்.
“சாரியா… நீ என்னைச் சந்தேகப்பட்ட இல்ல… அதனால, இன்னைக்கு என் கூட லஞ்ச் சாப்பிட்டே ஆகணும்” தீவிர முகபாவத்துடன் சொன்னான்.
வாடிய முகத்துடன், “சாரி பிரபு! என் ஃப்ரெண்ட் வரேன்னு சொல்லியிருக்கா… அவகிட்டட லஞ்சுக்குப் போகலாம்னு சொல்லிட்டேன். இன்னொரு நாளைக்குப் போகலாமே…” என்றாள்.
அதற்குள் சுரேஷும் அங்கே வந்துவிட, பிரபுவிடம் சொல்லிக்கொண்டவள் சுரேஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் கண்களிலிலிருந்து மறையும் வரை அமைதியாக இருந்த இருவரும், ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
இது எதையும் அறியாத ஜோஷிதா, பிரபுவின் மனமாற்றத்தைக் குறித்து மனத்திற்குள் ஆனந்தத்துடன் இருந்தாள்.
************
வெகுசிரத்தையுடன் தன்னை அலங்கரித்துக் கொண்ட ஜோஷிதா, பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி, கண்ணாடியில் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள்.
அவளது முகம், வெற்றிக் களிப்பில் மிளிர்ந்தது. மெல்லத் தனது இடது மணிக்கட்டிலிருந்த வடுவைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.
‘இவ்வளவு விரைவில் பிரபு தன்பக்கமாகச் சாய்வான்’ என்று அவளே நினைக்கவேயில்லை. மனத்திற்குள் இருந்த பழிவாங்கும் எண்ணத்தால் அவளால் அவனைச் சந்தேகப்படவே முடியவில்லை.
‘பாவம் சஹானா நீ! உன்னோட எதிர்பார்ப்பெல்லாம் இத்தனைச் சீக்கிரமா கலைந்து போகும்னு நினைச்சிருக்கவே மாட்ட இல்ல... இனி, நீ திரும்பி வந்தாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
ஆனா, நீ வரணும். உன்னோட பிரபு இப்போ என்னோட கைப்பிடியில இருக்கறதைப் பார்க்க நீ வந்தே ஆகணும். புரிதல் வேணும், நம்பிக்கை வேணும்னு எனக்குக் க்ளாஸ் எடுத்தயில்ல… இப்போ வந்து பாரு உனக்கே புரியும்.’
துவேஷத்துடன் அவளது மனம் கொக்கரித்துக் கொண்டிருந்தது.
அவளது கனவை கலைப்பது போல அழைப்புமணி விடாமல் அலறியது.
‘யாரது இப்படிச் செய்வது?’ என்ற முணுமுணுப்புடன் கதவைத் திறந்தாள்.
“ஹாய் ஜோஷி!” என்று சிரித்தபடி நின்றிருந்த மதனைப் பார்த்ததும் திகைத்துப் போனாள்.
‘பிரபு வரும் நேரத்திற்கு இவன் வந்திருக்கிறானே’ என்ற பதட்டத்துடன், “நீ எதுக்கு வந்த?” என்றாள் கோபத்துடன்.
“வாட் பேபி? உன்னைப் பார்க்க வந்திருக்கேன். இப்படிக் கோபமா பேசற? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? மூவ்… மூவ்…” என்றபடி உள்ளே நுழைய முயன்றான்.
தன்மீது அவன் உரசிவிடாமலிருக்க சட்டென அவள் நகர, உள்ளே நுழைந்து கதவை மூடினான்.
“ஏய் எதுக்குக் கதவை மூடுற?” பதட்டத்தில் குரல் நடுங்கியது அவளுக்கு.
“ஹய்யோ! இரகசியம் பேசணும் ஜோஷி! யார் காதிலும் விழக்கூடாது இல்ல…”பேசிக்கொண்டே கண்களால் வீட்டை அளந்தான்.
அவள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, “நைஸ் ஹவுஸ்! எப்படியும் ஒரு நாப்பத்தஞ்சு, ஐம்பது லட்சம் இருக்குமில்ல…”
கேட்டுக்கொண்டே ப்ரிட்ஜைத் திறந்து ஃப்ளேவர்ட் மில்க் பாட்டில் ஒன்றை எடுத்துத் திறந்தான்.
“மதன்! திஸ் இஸ் த லிமிட். முதல்ல கிளம்பு” என்று வாயிலை நோக்கிக் கையை நீட்டினாள்.
“என்ன நீ கொஞ்சங்கூட மேனர்ஸே தெரியல உனக்கு. நம்ம டீல் என்னாச்சு?” என்றான் எரிச்சலுடன்.
“இங்க பாரு… நான் எதையும் மறக்க. பிரபுவை இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா என்னோட வழிக்குக் கொண்டுவந்துட்டு இருக்கேன். நான் முதல்ல செட்டிலானாதான்… என்னால எதுவும் செய்யமுடியும். அவசரப்பட்டா எதுவும் நடக்காது. புரிஞ்சிதா” என்றாள் அழுத்தமாக.
குளிர்பானத்தை ஒருவாய் பருகியவன், “நீதான் புரியாம பேசற… நான் சொன்னது இதெல்லாம் இல்ல…” என்றவன் அவளருகில் வந்தவன், பாட்டிலை டேபிள்மீது வைத்தான்.
“இன்னுமா புரியல? எனக்குத் தேவை…”என்றவன் சுட்டுவிரலை அவளை நோக்கி நீட்டினான்.
நம்பமுடியாமல் அவனை வெறித்துப் பார்த்தாள்.
“ஏய்! நீ என்ன பைத்தியமா…?” கோபம், ஆத்திரம், பயம் என்ற கலவையான உணர்வுகளால் குழம்பிப் போயிருந்தாள்.
“யெஸ் பேபி! உன்மேல எனக்குப் பைத்தியம்…” என்றவன் அவளை நெருங்க, ஜோஷிதா செய்வதறியாமல் திகைத்து நின்றாள்.
“மதன்… இது சரியில்ல… இப்போ நீ கிளம்பு…” அச்சத்தில் அவளது உடல் வியர்வையில் நனைய ஆரம்பித்தது.
“உனக்கு ஏன் இப்படி வியர்க்குது? அன்னைக்கு நடந்தது தானே இன்னைக்கு நடக்குது…” என்றபடி அவளது இடதுகரத்தைப் பற்றினான்.
“மதன் கையை விடு… சப்தம் போட்டு ஊரைக் கூட்டிடுவேன்…” என்றவளுக்கு அழுகை வருவது போலானது.
“வாட் இஸ் திஸ் ஜோஷி! அன்னைக்கு சூரஜ் வீட்டு விசேஷத்துல நான் உன்கிட்ட கேட்டேன் இல்ல… மறந்து போச்சா உனக்கு?” என்றான்.
“இல்ல… அப்படி எதுவுமே நடக்கல. நான்தான் உன்னை அப்படி நடிக்கச் சொன்னேன்” என்று கத்தினாள்.
“நடந்துதா இல்லயான்னு சாட்சிக்கு நான் பிரபுவையே கூப்பிடுவேன்…”
தன்னை மறந்து, “நான் பிரபுகிட்டயே சொல்வேன்…” என்றாள்.
“வேலிக்கு ஓணான் சாட்சியா? என்னன்னு சொல்வ… அன்னைக்கு நடந்ததெல்லாம் டிராமா… உன்னை ஏமாத்தத்தான் அப்படி நடந்துகிட்டேன்னு தைரியமா சொல்லமுடியுமா உன்னால…” என்று கேட்டான்.
திணறியவள், “மதன்! உன்னை ஒரு ஃப்ரெண்டா நினைச்சித்தானே ஹெல்ப் கேட்டேன். அதை உனக்கு அட்வாண்டேஜா எடுத்துகிட்டு என்னை மிரட்டறது கொஞ்சம்கூட சரியில்ல…” என்றாள்.
“உனக்கு அட்வாண்டேஜா இருக்கறது மட்டும் சரி… அதையே நான் கேட்டா தப்பா? நல்ல கதையா இருக்கே…” என்று சிரித்தான்.
“மதன்! நான் சொல்றதைக் கேளு. பிரபுவோட கம்பெனி ஷேர்ஸ் இருபது பர்செண்ட் தானே கேட்ட, அதை உனக்கு இருபத்தைஞ்சு பர்செண்டா வாங்கிக் கொடுக்கறேன். கம்பெனி டெண்டர் உனக்கே கிடைக்கறா மாதிரி செய்றேன். ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.
அவள் சொல்லிமுடிக்கவும், கைத்தட்டும் ஓசை கேட்டு ஹாலை எட்டிப் பார்த்தாள்.
அங்கே பிரபு சோஃபாவில் அமர்ந்திருந்ததைக் கண்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“வாவ்! வாட் எ பெர்ஃபார்மன்ஸ் ஜோஷிதா! இத்தனை வருஷமா பிஸினஸ் பண்றேன் எனக்குக் கூட இவ்வளவு சாமர்த்தியம் இல்ல. ஆனா, நீ சும்மா சொல்லக்கூடாது… எவ்வளவு அழகா பேரம் பேசற…”
பாராட்டுதலாக வந்த வார்த்தைக்கும், அவனது முகபாவத்திற்கும் சற்று சம்மந்தமில்லாமல், கல்லாக இறுகியிருந்தது.
“பிரபு! நான்…” என்றவளை இடைமறித்தான்.
“தேங்க்யூ மதன்! நீ கிளம்பு…” என்றான்.
ஜோஷிதாவின் பக்கமாகத் திரும்பிய மதன், “சாரி ஜோஷிதா நீ ரொம்ப வற்புருத்தி கேட்டதால் தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன். பட், எனக்கு என் லைஃப் முக்கியம். அதைத் தியாகம் பண்ணிட்டு அடுத்தவங்களுக்கு உதவற அளவுக்கு நான் நல்லவன் இல்ல…” என்றவன், “சாரி பிரபு…” என சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
பிரபு, அவளை முறைத்துப் பார்க்க, அவனது பார்வையில் வெலவெலத்துப் போனாள்.
“பிரபு நான்…” என்றவளை, “பேசாத… வர்ற ஆத்திரத்துக்கு உன் கழுத்தை நெறிக்கணும் போலயிருக்கு. ஆனா, உன்னைத் தொடக்கூடாதுன்னு பார்க்கறேன். நீயெல்லாம் ஒரு பொண்ணா…” என்றான் வெறுப்புடன்.
“ஏன் இன்னைக்கு உன் மனைவி வந்ததும் நான் உனக்குக் கசந்து போய்ட்டேனா…?” என்றாள் அதே ஆத்திரத்துடன்.
“உனக்காக… உன்னாலதானே நான் என் வாழ்க்கையைப் பத்தி நினைக்காம நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தேன். உன் மேல வச்சிருந்த காதலால எல்லாத்தையும் சகிச்சிகிட்டேன்… இன்னைக்கு நான் உனக்கு மோசமானவளா தெரியறேன் இல்ல…” என்று கத்தினாள்.
“காதலைப் பத்தி நீ பேசாத. அதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? அப்படி நீ என்னைக் காதலிச்சிருந்தா நீ என்ன செய்திருக்கணும்… என் மனசை மாத்தியிருக்கணும். நான் அப்படிப்பட்டவ இல்லைன்னு என்னை ஒரு அறை விட்டிருக்கணும்…
உன்னோட சுயநலத்துக்காக, நான் சொன்னதை ஏத்துகிட்ட. நீ நினைச்சிருந்தா முடியாதுன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்க முடியாதா? இல்ல, உன்கூட பழகின நாள்ள என் மனசை உன்பக்கமா திருப்பியிருக்க முடியாதா?
எதுக்காகவும் நீ மெனக்கெடவே இல்லையே… உனக்குத் தேவையானதெல்லாம் கிடைக்குதுன்னு தெரிஞ்சதும், உன்னையே விட்டுக் கொடுத்தவதானே. இன்னைக்கு என்ன வியாக்கியானம் பேசறா?”
அவனது வார்த்தைகளைக் கேட்டதும் துடித்துப் போனாள்.
“நியாயமா இதையெல்லாம் பேச எனக்கு எந்தத் தகுதியும் இல்லைதான். அதேநேரம், இப்போ இதையெல்லாம் சொல்லக்கூடிய தகுதியும் எனக்கு மட்டும்தான் இருக்கு. ஒரு பேச்சுக்குக் கேட்கறே. உனக்கு ஒரு வாழ்க்கை அமைந்து, அதில் நான் தலையிட்டிருந்தால் உனக்கு எப்படி இருந்திருக்கு?
நிச்சயமா நான் அதைச் செய்திருக்கமாட்டேன். ஆனா, எதையுமே யோசிக்காம நீ எனக்கெதிரா எல்லா வேலையும் செய்த. சஹானாவை மிரட்டின; மதனை உனக்கு ஆதரவா நடிக்க வச்ச; எனக்காக தற்கொலை செய்துக்கற அளவுக்கு நடிச்ச…
அன்னைக்கு நம்மால ஒரு பொண்ணோட வாழ்க்கை திசைமாறி போச்சேங்கற குற்ற உணர்ச்சியால, எதையுமே விளங்கிக்க முடியாம இருந்தேன். ஆனா, எப்பவும் அப்படியே இருப்பேன்னு நினைச்ச பாரு அங்கே தான் தப்பு பண்ணிட்ட.
மதன் அப்படிக் கண்மண் தெரியாம குடிக்கக்கூடியவனும் இல்ல, நீ தற்கொலை செய்துக்கற அளவுக்குத் தைரியசாலியும் இல்ல. அப்படியே அவன் குடிச்சிருந்தாலும், ஒரு பொண்ணுகிட்ட முறைதவறி நடக்கும் ஆளும் இல்லை.
சஹானா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், உன்னோட சுயரூபம் தெரிஞ்சும் உனக்காகன்னு யோசிச்சேன். அவளோட மனசை காயப்படுத்திட்டு, உனக்காக பரிதாபப்பட்டேன் பாரு… அதுக்குத்தான் இப்போ அனுபவிக்கிறேன்.
ஹும்! தப்புக்குக் காரணம் நீயா இருந்தாலும், அதுக்கெல்லாம் அஸ்திவாரம் போட்டது நான்தான். எதையோ நினைச்சி ஏதையோ இடிச்ச கதையா, உனக்கு உதவணும்னு நினைசேன்…” என்றவன் டீபாய் மீதிருந்த ப்ரீஃப்கேஸைத் திறந்து ஒரு பெரிய கவரை எடுத்து டேபிள் மீது போட்டான்.
“இந்த வீட்டை உன்பேர்ல மாத்திட்டேன். இது உன் பேர்ல பேங்க்ல டெப்பாஸிட் பண்ண பணத்துக்கான சர்ட்டிஃபிகேட். உனக்கு டூ வீலர் ஒண்ணு ஆர்டர் பண்ணியிருக்கேன். நாளைக்குக் காலைல உன் வீட்டுக்கே வந்திடும்.
உனக்கு என்ன செய்யணும்னு நினைச்சேனோ அத்தனையையும் செய்துட்டேன். இனி உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. பிரபுன்னு ஒருத்தன் உன் வாழ்க்கைல இல்லன்னு நினைச்சி மறந்துடு.
அதுதான் உனக்கு நல்லது. இதுக்கு மேலேயும் நீ ஏதாவது பிரச்சனை செய்யணும்னு நினைச்சா… இந்தப் பிரபு எப்படி மாறுவான்னு உனக்கே தெரியும். சோ, குட் பை!” என்றவன் ப்ரீஃப்கேஸுடன் திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் பேச ஆரம்பித்ததிலிருந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தனது எந்த வார்த்தையும் இனி எடுபடாது என்று நினைத்தாளோ என்னவோ! முகத்தை மூடிக்கொண்டு தன்னை மறந்து கதறி அழுதாள்.
தான் தோற்றுவிட்டதற்காக அழுதாளா… அல்லது தனது முட்டாள்தனத்தை எண்ணி அழுதாளோ அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
No comments:
Post a Comment